"வாழ்க்கைக்கு அறிவியல், கலை அவசியம்'

திருச்சி: திருச்சி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "காஸ்கா ஃபேர் 2010' என்ற தலைப்பில் நடந்த அறிவியல் கண்காட்சி நிறைவுவிழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மாணவ, மாணவியருக்கு பரிசளித்து பேசியதாவது:அறிவியல் வளர்ச்சியால் கல்விதுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு தேவை கலையா?, அறிவியலா? என இங்கு மாணவியர் விவாதம் நடத்தினர்.இதேபோல், "லிஃப்ட்'டுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அமெரிக்கருக்கும், ஆங்கிலேயேருக்கும் இடையே விவாதம் நடந்தது. ஆங்கிலேயர் "லிஃப்ட்' என்று கூறுவதை அமெரிக்கர் "எலிவேட்டர்' என்பர். "லிஃப்ட்டை கண்டுபிடித்தது நாங்கள் தான் எனவே, "எலிவேட்டர்' என்பது தான் அதற்கு சரியான பெயர்' என்று அமெரிக்கர் கூறினர்.அதற்கு அந்த ஆங்கிலேயேர் சொன்னார், "எலிவேட்டரை கண்டுபிடித்தது நீங்களாக இருக்கலாம். ஆங்கிலத்தை கண்டுபிடித்தது நாங்கள் தான். எனவே, அதற்கு "லிஃப்ட்' என்பது தான் சரியான பெயர்' என்றார். கலையா, அறிவியலா என்று பார்க்கையில் முதலில் கலை தான் நிற்கிறது.



ஆரியபட்டர், பாணினி என அறிவியலர் நம் நாட்டில் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடி கம்பர். அவர் தனது கம்ப ராமாயணத்தில் "புஷ்பகவிமானம்' என்று வர்ணித்துள்ளார். இதுவே இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு சான்று.அணுகுண்டை கண்டுபிடித்த நோபல், "தனது கண்டுபிடிப்பால் அழிவு ஏற்படுமே' என்று மனம் வெதும்பியே "நோபல்' அமைப்பை ஏற்படுத்தினார். கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.அறிவியலால் வளர்ச்சி இருக்க வேண்டும். தேவையற்ற வீக்கம் இருக்கக் கூடாது. தேவையான வளர்ச்சி இருக்கும் போது, தேவதையாக தெரியும் அறிவியல், தேவைற்ற வீக்கம் வரும்போது பிசாசாக தெரியும். வாழ்க்கைக்கு அறிவியல், கலை இரண்டும் அவசியம்.கலையின் துணை கொண்டு அறிவியலை வழிநடத்திச் செல்ல வேண்டும். இரண்டும் இரு கண்கள் போன்றது. யாரை நீங்கள் உங்கள் "ரோல்மாடலாக' எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதில் தான் வாழ்க்கை உள்ளது.பெண்களை கேலிசெய்து சினிமாவில் வரும் வசனம், பாடல்களை பார்த்து பெண்களாகியே நாமே கைத்தட்டி ரசிக்கிறோம். தில்லையாடி வள்ளியம்மை பற்றி சிலருக்குத் தான் தெரியும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வேர் இருக்கும். அதை புரிந்து கொண்டு ஆசிரியர், பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

 

0 comments: