மாணவப் பருவத்தில் நிதி சார்ந்த விழிப்புணர்வு அவசியம் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

http://img.dinamalar.com/data/large/large_112470.jpg

மதுரை : "" மாணவப் பருவத்தில் நிதிசார்ந்த கல்வியறிவு பெறுவது அவசியம்,'' என, மதுரையில் நடந்த நிதிசார்ந்த கல்வி அறிவுத் திட்ட துவக்கவிழாவில், பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி பேசினார்.


பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி பேசியதாவது: அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பிற்கு புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் நிதி சார்ந்த கல்வியறிவை பெறும் வகையில், சோதனை முயற்சியாக எட்டாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 ல் புதிய பாடம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இதற்கான திட்டமிடல் நடந்துள்ளது. 700 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளோம். பள்ளிகளில் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் இப்பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்யவேண்டும், என்றார்.


தேசிய பங்கு சந்தை (என்.எஸ்.இ.,) இணை மேலாண் இயக்குனர் சித்ரா பேசியதாவது: பங்கு வர்த்தகத்தில் என்.எஸ்.இ., உலகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் நடக்கிறது. நிதிசார்ந்த கல்வியறிவை மாணவர்கள் பெறவேண்டும் என்பதற்காக பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளோம், என்றார்.


பாடநூலை வெளியிட்டு மேலாண் இயக்குனர் ஜீவரத்தினம் பேசியதாவது: இந்தியாவின் மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், 50 சதவீதம் பேர். இந்தியாவின் மனிதசக்தியைக் கண்டு, உலகமே பயப்படுகிறது. ஒத்துழைப்பு, அறிவுத்திறன் போன்றவற்றால் இந்திய வல்லுனர்களை, பிறநாட்டவர்கள் மிகவும் விரும்புகின்றனர். இத்தகைய இளையோர் சக்தியை, முழுமையாக பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவப் பருவத்திலேயே, நிதியை கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக தமிழகத்தில் மதுரை உட்பட 16 மாவட்டங்களில் 76 அரசுப் பள்ளிகள், 106 உதவி பெறும் பள்ளிகளில் இப்பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. பாடநூல் கழகம் புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக வழங்குகிறது. ஒன்பதாம் வகுப்பிற்கான ஆங்கிலம், தமிழ் அகராதிகள் ஒன்பது லட்சம் அச்சிடப்படுகின்றன. மார்ச்சுக்குள் வினியோகிக்கப்படும், என்றார்.


பாடநூல் கழக செயலர் சங்கர், மேல்நிலை, இடைநிலை கல்வி இணை இயக்குனர்கள் முத்து பழனிச்சாமி, ராஜேந்திரன், பங்குசந்தை தென்மண்டல முதன்மை மேலாளர் சுனிதா ஆனந்த், மேலாளர் கிரிதர் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

0 comments: