"கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டும்'

வேலூர்: ""விளையாட்டு வீரர்களிடம் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும்,'' என கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரன் கூறினார்.தென் மண்டல பல்கலைக்கழகளுக்கு இடையேயான ஆண்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டிகள் வேலூர் வி.ஐ.டி., பல்கலையில் கடந்த 18ம் தேதி முதல் நடந்தது வந்தது.இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 57 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆறு நாட்கள் நடந்த இப்போட்டியின் நிறைவு விழாவும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடந்தது.


வி.ஐ.டி., துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சம்பத், இணை துணை வேந்தர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் விக்டர் தன்ராஜ் வரவேற்றார், கூடுதல் டி.ஜி.பி., (நிர்வாகம்) ராஜேந்திரன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுக்கோப்பையை வழங்கி பேசியதாவது:தேன் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்து முடிந்துள்ள கால்பந்து போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.சமீபத்தில் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் யாரும் எதிர்பாராத அளவில் பதக்கங்களை நம் வீரர்கள் குவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டியில் மட்டுமே முன்னணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தடகள போட்டியும் இந்த பட்டியலில் வந்துள்ளது.


வேலூர் வி.ஐ.டி.,யில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ள நான்கு அணிகளும் அகில இந்திய கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளன. அதிலும் வெற்றி பெற இப்போதே பயிற்சி செய்ய வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம், தோல்வியை மறந்து வெற்றியை ருசிக்க வீரர்கள் தயாராக வேண்டும்.விளையாட்டு வீரர்களிடம் கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும். விளையாட்டு துறையில் இந்தியா முன்னேறி வரும் வேளையில் இன்னும் அதிக அளவில் வீரர்கள் தயாராக வேண்டும், காவல் துறையில் விளையாட்டு வீரர்களுக்காக 5 சதவீத இட ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி முன்னேற வழி செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.தென் மண்டல கால்பந்து போட்டியில் முதல் பரிசுக்கான கோப்பையை சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் வென்றது. இரண்டாவது பரிசை கேரளா மாநிலம் கன்னூர் பல்கலைக்கழகமும், மூன்றாம் பரிசை கேரளா பல்கலைக்கழகமும், நான்காம் பரிசை அண்ணா பல்கலைக்கழகமும் பெற்றன.வெற்றி பெற்ற இந்த நான்கு அணி வீரர்களும் அடுத்த மாதம் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் நடக்க உள்ள அகில இந்திய கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

 

0 comments: