2010 இறுதிக்குள் இரண்டு செயற்கைகோள்கள் ஏவ ஐ.எஸ்.ஆர்.ஓ., திட்டம் : கருத்தரங்கில் மூத்த அதிகாரி தகவல்

மார்த்தாண்டம் : ஐ.எஸ்.ஆர்.ஓ., சார்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு செயற்கைகோள்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக ஐ.எஸ்.ஆர்.ஓ., அசோசியட் டைரக்டர் நாராயணமூர்த்தி இலவுவிளை இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பேசினார்.


மார்த்தாண்டம் அருகே இலவுவிளை மார் எப்ரேம் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் ஐ.எஸ்.ஆர்.ஓ., தொழில் நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் கல்லூரி தாளாளர் பிரேம்குமார் அடிகளார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் லேனின் ப்ரட் முன்னிலை வகித்தார்.


கருத்தரங்கில் திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ., அசோசியட் டைரக்டர் நாராயணமூர்த்தி பேசியதாவது: ஐ.எஸ்.ஆர்.ஓ., சார்பில் ஜி.எஸ்.எல்.வி - எப்.சிரோ 6 என்ற ஏவுகணையும், பி.எஸ்.எல்.வி.சி 16 என்ற ஏவுகணையும் இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை செய்யப்படும். இதேப்போன்று ஜி.சேட் 5 என்ற செயற்கைகோளும், ரிசோட்ஸ் சேட் 2 என்ற செயற்கைகோளும் இந்த ஆண்டுக்குள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வலியமலை, மகேந்திரகிரியில் கிரோயோஜினிக் முன்னேற்றத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. உலகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் அனைத்து துறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் படிப்பவர்கள் எலெக்ராணிக்ஸ் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு இன்ஜினியர் தனிப்பட்ட முறையில் எதையும் சாதிக்க முடியாது. கூட்டாக முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் படிக்கும் போது கூட்டாக படிப்பது, கூட்டாக கலந்துரையாடல் செய்வது மிகவும் அவசியம். பல்வேறு கருத்துகள் குறித்து விவாதிக்கும் போது கூடுதல் விவரங்கள் தெரிய வாய்ப்பு ஏற்படும். இது பிற்காலத்தில் பலன் தரும். இதை போல் ஆங்கிலத்தில் பேச வேண்டும். இது ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு துணை புரியும். வேலைவாய்ப்பில் இன்டர்வியூவிற்கு செல்லும் போதும் தனித்தன்மையை வெளிப்படுத்த உதவும். கணக்கு, இயற்பியல் பாடங்களை அடிப்படையாக நல்ல முறையில் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் பல இடங்களில் பயன்படும். இவ்வாறு திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ., அசோசியட் டைரக்டர் நாராயணமூர்த்தி பேசினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். கல்லூரி இயக்குனர் ஆல்பி நன்றி கூறினார்.

 

0 comments: