பள்ளி மாணவர்கள் பொது அறிவை வளர்த்து கொள்வது அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல்: ""பள்ளிப் பருவத்தில் பாடக் கல்வியோடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு உதவியாக இருக்கும்,'' என, மாவட்ட கலெக்டர் மதுமதி பேசினார்.


நாமக்கல் மாவட்டம் கோனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுமதி புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்த வைத்து பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவியர் நலனை கருத்தில் கொண்டு 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 வகுப்பறைக் கட்டிடம் கட்டிக் கொடுத்த பழனியம்மாள் கந்தசாமி அறக்கட்டளை மற்றும் என்.டி.சி., குழுமத்தை சேர்ந்த டாக்டர் சந்திரமோகனுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. தவிர, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகம், சீருடை, மூன்று சக்கர வண்டி, என அந்நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் மாணவ, மாணவியரை கல்வியில் ஊக்கப்படுத்தும்.


அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு பணிபுரிய வேண்டும். மாணவ, மாணவியரை சிறந்த கல்வியாளராக ஆக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. பள்ளிப் பருவத்தில் பாடக் கல்வியோடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு உதவியாக இருக்கும். படிப்பு மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் மாணவ, மாணவியர் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பஞ்., தலைவர் கணேசன், கந்தசாமி அறக்கட்டளைத் தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, பள்ளி தலைமையாசியர் தணிகாசலம், பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: