வயதானவரின் அனுபவம், அறிவுரை இளம் சந்ததியினருக்கு அவசியம்

திருச்சி: ""வயதானவர்களின் அனுபவம், அறிவுரை வருங்கால இளம் சந்ததியினருக்கு மிகவும் அவசியம்,'' என்று திருச்சியில் நடந்த உலக முதியோர் தின விழாவில் கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசினார். திருச்சி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் உலக முதியோர் தின விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் லட்சுமி வரவேற்றார். புங்கனூரைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி அழகம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து, "நாட்டின் வளர்ச்சிக்கு முதியோர்களின் பங்கு' எனும் தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசியதாவது: மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 வயதாக உள்ளது. மருத்துவ வசதி, மருத்துவமனை, சிறப்பான சுற்றுச்சூழல் போன்றவற்றால் தற்போது மனிதர்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது.


பல ஆண்டுக்கு முன் சர்க்கரை நோய் ஏற்பட்டது என்றால் சரியான மருத்துவ சிகிச்சை இன்றி ஏராளமானோர் இறக்கும் சூழ்நிலை இருந்தது. இப்போது மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளால் சர்க்கரை நோயால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பல குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோரை தனியாக விட்டுவிட்டு சம்பாதிப்பதற்காக வெளியூர், வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். பெற்றோர் தனிமையிலும், முதியோர் இல்லத்திலும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நமது பாரம்பரியமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இதனால் சிதைந்து வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. வயதானவர்களின் அனுபவம், அறிவுரை வருங்கால இளம் சந்ததியினருக்கு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார். சமூகநல வாரிய உறுப்பினர் செல்வி கிரேஸ் ஜார்ஜ், சப்போர்ட் தொண்டு நிறுவனத்தின் செயலர் தர்மராஜா, மூத்த குடிமக்களுக்கான மாவட்ட குழு உறுப்பினர் செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் விஜயரெங்கன் நன்றி கூறினார்.

 

0 comments: