இயற்கையை சீரழித்து விடக்கூடாது பெரியார் பல்கலை துணை வேந்தர்

திருச்செங்கோடு: ""நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ என்ஜினியரிங் துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்,'' என, விவேகானந்தா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பெரியார் பல்கலை துணை வேந்தர் முத்துச்செழியன் பேசினார். திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.கல்வி நிறுவன தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். முதல்வர் முருகேசன் வரவேற்றார். முதல்வர்கள் ராஜேந்திரன், மவுலாதேவி, சாந்தகுமாரி, கலாவதி, நிர்வாக அதிகாரி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன், பல்கலை அளவில் 17 தங்கப்பதக்கம் பெற்ற மாணவியர் உட்பட 3,100 பேருக்கு பட்டச்சான்று வழங்கி பேசியதாவது: கற்றுக்கொள்ளுதல் கல்லூரியோடு முடிந்து போவதில்லை. வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும். அறிவுள்ளவர்களை தான் சமுதாயம் மதிக்கும். பலவிதமான கனவுகளை சுமந்து கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறுபவர்கள் அந்தக் கனவு நிறைவேற வேண்டும் என்ற உறுதியோடு உழைத்தால் நிச்சயமாக கனவு நிறைவேறும். உங்களை நோக்கி வரும் சவால்களை எதிர்கொண்டு உழைக்க வேண்டும். பொருளாதாரத்தில் 9 சதவீத வளர்ச்சியடைந்துள்ள நம் நாட்டில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வருவாயை பெருக்குவதற்காக இயற்கையை சீரழித்து விடக் கூடாது. மாறிவரும் பருவநிலை மாற்றங்களுக்கு புவி வெப்பமயமாதல் காரணம் என்பதை உணர்ந்து, சமுதாயம் பாதிக்காத வகையில் தொழில் வளர்ச்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். விவசாயம், தொழில், உள்கட்டமைப்பு போன்றவற்றில் நம் நாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. உலகமயமாக்கல் போட்டியில், இந்தியா வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் உள்ளதாக வளர்ந்துள்ளது. அறிவுத்திறன், தகுதியுள்ள உழைப்பாளிகள், நிறைந்திருப்பதால்தான் இந்தியா வளர்ச்சிபெற்று வருகிறது. மாணவர்களின் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்த வேண்டும். நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ என்ஜினியரிங் துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள கல்லூரிகளும், பல்கலையும் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: