விவசாயத்துறையில் புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அவசியம்: துணை ஜனாதிபதி பேச்சு

திண்டுக்கல் : ""இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டுள்ள விவசாயத்துறையில், புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அவசியம்'' என, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலை.,யின் 28 வது பட்டமளிப்பு விழா நடந்தது.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆற்றிய பட்டமளிப்பு உரை: மகாத்மா காந்தியின் "புதிய கல்வி' திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 1956 ல் இப்பல்கலை., உருவானது. கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இங்குள்ள கல்விமுறையை இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளது. 1941ல் ஜமீயா நகரில் அடிப்படை கல்வி குறித்த 2 வது தேசிய கருத்தரங்கம் நடந்தது. அதில் டாக்டர் ஜாகீர் உசேன் பேசுகையில், "பள்ளிகல்வி என்பது தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தின் சேவையை மையமாக கொண்டிருக்க வேண்டும்,'என்றார். காந்தி கிராம பல்கலை., இச்சேவையை தான் செய்கிறது. இக்கொள்கையை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் தொழில், வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டுள்ள விவசாயத்துறையில் புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அவசியம். வரும் ஐந்தாண்டு திட்டத்தில், விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தந்து, ஏழை மக்களின் வாழ்க்கை மேம்படவும், ஏழ்மையை ஒழிக்கும் வகையிலும் புதிய திட்டங்கள் தேவை. தரிசு நிலங்களை மேம்படுத்த கூடுதல் கவனமும், பண்ணை விவசாயத்திற்கு முக்கியத்துவமும் தர வேண்டும்.

விவசாய தொழில் நுட்ப வளர்ச்சிக்காக நாட்டின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதம் ஒதுக்க வேண்டும். விவசாய பல்கலைகள் ஆராய்ச்சி முறைகளில் புதிய உத்திகளை கையாள வேண்டும். தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்றி, பருத்தி, மக்காச்சோளம், சூரியகாந்தி, நெல் உற்பத்தியில் சாதனை செய்துள்ளனர். விவசாயிகளால் வரவேற்கும் புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி வரவேற்றார். பதிவாளர் எம். சிவராமன், அமைச்சர் ஐ. பெரியசாமி, சித்தன் எம்.பி., கலெக்டர் வள்ளலார், காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கவுசல்யா தேவி உட்பட பலர் பங்கேற்றனர். பாரம்பரிய விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் சென்னையை சேர்ந்த வி.பாலசுப்பிரமணியத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 32 பேருக்கு டாக்டர் பட்டமும், 51 பேருக்கு தங்க பதக்கம் மற்றும் 1,131 பேருக்கு பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

0 comments: