கல்வி எதற்காக? வாசகர் கட்டுரை.

கல்வி பெற்றால் என்னவாகலாம்?

-என்.நடராஜன்
    கல்விதான் நமக்கு சரியான பாதை என்ற முடிவுக்கு வந்தவர்களுக்கு வேறு சில கேள்விகள் எழலாம். கல்வி அடிப்படையிலான வாழ்க்கை எப்படியிருக்கும்.
கல்வி கிடைத்த எல்லோருக்குமே நிரந்தர வருமானமும், வளமான வாழ்வும் கிடைக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உண்டு. அது முழுவதும் உண்மையில்லை.
   தற்காலத்தில் தரப்படும் கல்வியை, முறையாக விரும்பி, கடின உழைப்புடன் படித்தால், அரசாங்கம், தனியார் நிறுவனங்களில் கிளார்க் முதல் தலைமை அதிகாரி வரையான பதவிகளில் ஒன்றை நாம் வகிக்கலாம். ஓரளவு உழைப்பைத் தந்து நலமாக வாழத் தேவையான அல்லது அதற்கு அதிகமான வருமானம் பெறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
   கிடைத்த கல்வியில் அதிக அறிவைப் பெற்றவர், தான் நினைத்த இலக்கை எளிதில் அடைய முடியும். (அறிவு வேறு கல்வி வேறு). கல்வி பெற்றவரில் சிலர் சொந்தமாகத் தொழில், வியாபாரம் என்று செய்பவர்கள் உண்டு. அதிக வருமானம் கிடைக்கும். வருமானத்தில் ஏற்ற தாழ்வு தவறாமல் உண்டு.

இப்பொழுது கல்வியைப் பற்றிப் பார்க்கலாம்.

     கல்வி,  அறிவை அடைய பல வழிகளில் ஒரு வழி. அதன் வழியாக விரைவாக அறிவை அடையலாம். ஒரே கல்வியை பலர் அடைந்த போதும், ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவில் அறிவை அடைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தான் அடைந்ததை தக்கவைத்துக்கொள்ளும் சக்தி அல்லது நினைவில் கொள்ளும் சக்தி வேறுபடுவது ஒரு முக்கிய காரணம்.
 தக்கவைத்ததிலும், அலசி ஆராய்ந்து அதிலிருந்து அறிவைப் பிரித்து சேகரிப்பதிலும் வேறுபாடுகள் காணலாம்.  பிரித்த அறிவைப் பயன் படுத்துவதில் வேறுபாடு மூன்றாவது காரணம்.
 அனுபவத்தால் அறிவைப் பெறலாம். நியூட்டன் பெளதிக அறிவின் முக்கியத்துவம் வகிக்கும் மூன்று நியதிகளை தன் அனுபவத்தால் கண்டுபிடித்தார். அதே அறிவை நாம் அடைவது கல்வியால். அதுமட்டுமல்ல அதை வெகு வேகமாக அடைகிறோம். அனுபவத்தால் மட்டும் அறிவை அடைவது மிகத் தாமதான வழி.

கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு:

ஒரு உவமானம் மூலமாக இதை விளக்குவோம்.

ஒரு பூவில் வாசம் இருப்பது, அதை அடைந்து, முகர்ந்து ஆனந்திப்பது ஒரு கட்டம். அது சில வினாடிகளில் முடியும் ஒரு விவகாரம். கல்வி அந்தப் பூவை, பல டன் அளவில் சேகரித்து, அதிலிருந்து வாசனைத் திரவியத்தை பிரித்தெடுத்து ஒரு குப்பியில் சேர்த்து, தேவைப்படும் போதெல்லாம் பயன் படுத்தி பல ஆண்டுகள் பயன் பெறுவது அறிவுடன் ஒப்பிடலாம்.

கல்வி பெற்றால் அறிவு தானாக வருமா?

இதுவரை அப்படிப்பட்ட ஒரு கல்வி வரவில்லை.
கல்வி, சட்டி பானை கரண்டி போன்ற ஒரு கருவி. அதிலிருந்து அறிவு என்கிற சாப்பாடு வர வேறு பல கட்டங்கள் உண்டு.

அறிவை அடைந்தோமா என்பது எப்படி தெரியும்?

அறிவை அடைந்த எவரும் ஏமாற்றத்திற்கு ஏதுவாக இருப்பதில்லை.
போலிச்சாமியார்களை சரணடைய மாட்டார்கள்
உழைப்பிற்கான ஊதியம் பெறுவோம்.
பிறர் கை தட்டுவதைக் கேட்டு / பார்த்து நாமும் கைதட்டமாட்டோம்.
ஜாதி, இனம் மொழி ஆகிய கற்பனைக் கயிறுகளால் கட்டப்பட்டு மற்றவரோடு சண்டையிட்டு, ஏழ்மையே விதியென்று வாழமாட்டோம்.
சாராயத்தில் சுகம் காண்பதில்லை.
எடுப்பார் கைப்பிள்ளையாக மாறமாட்டோம்.
நம் எதிர்காலத்தை தீர்மானம் செய்ய மற்றவரை எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
அறிவின் துணை இல்லாமல் வாழ்பவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறார்கள். (நம்பிக்கைகள் – கடவுள், தலைவர்கள், மதத் தலைவர்கள், கற்றவர்கள் என்று கணக்கில்லாமல் உண்டு).
நம்பிக்கையை அடிப்படையில் வாழ்பவர்கள் ஏமாற்ற எளிதானவர்கள்.
நாம் இன்று அறியாமையில் வாழ்ந்தால் அறிவை அடைந்தபிறகு அறிவின் அடிப்படையில் வாவோம்.
மலிவான கேளிக்கைகள் மனதைக் கவர்வதில்லை.
விளம்பரங்கள் இவர்களை மயக்குவதில்லை.
இலவசங்கள் இவர்களை வீழ்த்துவதில்லை.
வாழும் வழிகளில் தடுமாற்றங்கள் ஏற்படுவதில்லை. (கல்விக் காலத்தில் தோன்றும் காதல், காதல் காலத்தில் பொருள் சேர்ப்பது, பொருள் சேர்க்கும் காலத்தில் ஆன்மிகத்தில் நாட்டம், ஆன்மிக நாட்டம் வரவேண்டிய காலத்திலே பொருள் சேர்ப்பது – என்பது போன்ற தடுமாற்றங்கள் மனிதருக்கு துயரம் தருகின்றன.)


சீன அறிஞர்களும் அறிவும்.

கல்வியையும் அறிவையும் இவர்கள் பிரித்துக்காட்டி ஆயிரம் வருடங்களுக்கு அதிகமாகின்றன்.
கல்வியைப் பெற்றும் சிந்திக்காதவர், கல்வி பெற்ற நேரமும் உழைப்பும் (செலவும்) வீண்.

கல்வி பெறாமல் சிந்தனை செய்வோர் தங்களுக்கும் சுற்றியுள்ளோருக்கும் ஆபத்தை விளைவிப்பார்கள்.

முறையான கல்வியானது நம்மை அடையும் எண்ணற்ற தகவல்களில் தேவையானதை பிரித்தெடுத்து, நம்மை அடைவதற்கு வாய்ப்பில்லாத எண்ணற்ற தகவல்களை தேடிப்பெற்று சேமிக்க உதவும்.

சிந்தனை, கணிணி (கம்ப்யூட்டரைப்) போன்ற ஒரு இயந்திரமாகக் கொள்ளலாம்.

சேமித்ததை செமித்து, பூவிலிருந்து வாசத்தை சேமிப்பதைப்போல சேமித்து, தக்க சமயத்தில் சரியான அளவில் பயன் படுத்தி, தோல்விகளைத் தவிர்ப்பது, வெற்றிகளை அடைவதும் ஆகும்.

இருவகைக் கல்வி

பண்டைக்காலத்தில் நமது நாட்டிலே இருவகைக் கல்விகள் இருந்தன.

முதல் வகை – தொழிற்கல்வி: செய்து வந்த தொழிலின் அடிப்படையில் ஒரு ஜாதி. ஜாதியின் அடிப்படையில், தொழிற்கல்வி. மற்றவர் தொழில் ரகசியம் அடைந்தால், தமது வருமானம் குறையலாம் என்ற பயத்தில், மனிதர்கள் மத்தியில் ஜாதிகள் என்கிற முள் வேலி.

வீட்டின் முற்றத்திலே, தந்தை தனயனுக்கு அளித்த அந்த தொழிற்கல்வி இன்று விரும்பியவருக்கு அளிக்கப்படுகிறது.

இந்தக் கல்வி வயிற்றைக் கழுவ பயன் பட்டது. அறிவை வளர்க்க அல்ல.

இரண்டாம் வகை- தொழில் தொடர்பில்லாத கல்வி. இந்த வகைக் கல்வி பெற்ற எவருக்கும் இதை வைத்து வயிற்றைக் கழுவ வழி கிடைக்காது.
இளம் வயதில் பொருள் விளங்காத பல லட்சம் அளவிலான சொற்றொடரை விழுங்க தினசரி பயிற்சி. இந்த வகைப் பயிற்சி நினைவாற்றலை வளர்க்கிறது. வேதங்கள் எத்தனை பெரிய ஒரு களஞ்சியம். அதை மனப்பாடமாக செய்வது தினப்படி செயல்.

அடுத்து, அன்றைய தினத்தில் உள்ள விஞ்ஞான அறிவு, இலக்கணம் வரலாறு என்றும் போதிக்கப்படுகின்றன. தற்பாதுகாப்புப் பயிற்சியும் சில திட்டங்களில் உண்டு.

மிக முக்கியமாக அறிவியல் ரீதியாக சிந்தனை, லாஜிக், தர்க்கம் போன்றவை தொடர்கின்றன. இவைகள் சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன.
பெரும் வணிகர்கள், அரசர்கள், மந்திரி பிரதானிகளின் குமாரர்களுக்கு ஆசிரியனின் வீட்டிலும் நிலத்திலும் வேலை செய்து பணிவுடன் பெறுகிறார்கள்.

நமது கல்வித்திட்டத்தில் ஓரளவு விஞ்ஞானம் இலக்கணம் கலந்திருந்தாலும்,
நினைவாற்றலை வளர்க்காத அம்சங்களும், சிந்தனைத் தூண்டும் விதமான முக்கிய அம்சம் எதுவும் இல்லாதும் ஒரு பெரும் குறை.

இவை இல்லாத கல்வி அரை வேக்காட்டு தொழில் வல்லுனர்களை உருவாக்கலாம். அரைகுறைப் பேராசிரியர்களை உற்பத்தி செய்யலாம். அறிவுள்ள மக்களை, ஏழ்மை இல்லாத சமுதாயத்தை, உருவாக்க முடியாது.

அடுத்ததாக அரை குறைக் கல்வி குறித்து பல கதைகள் சொல்லுவோம்.
வாழும் அறிவை வேகமாக அடைய ஞானிகள் சிறிய பெரிய கதைகளை பயன்படுத்தினார்கள். அறிவை அடையப் பழகியவர்கள் கதைகளிலிருந்து அறிவைப் பிரித்தெடுத்து மனதில் ஏற்றி பயன் பெறுவார்கள். பயிற்சி இல்லாதவர்கள், கதைகளை ஒரு சுவாரசியமான ஒரு வெட்டிப் பேச்சாகக் காண்பார்கள். பயன் அடைய மாட்டார்கள்.

ஓவ்வொரு சொற்றொடரிலும் அறிவைக் காண்பதற்கு எப்படிப்பட்ட பக்குவம் தேவை.

தெனாலி ராமன் என்ற அறிஞர். அவர் பிள்ளை அரசனின் தோட்டத்தில் இருந்த ரோஜாப் பூக்களை பறிக்கும் போது காவலர்கள் பிடித்து, சாட்சிக்கு பறித்த பூவுடன் (பல்லக்கில் ஏற்றி, மந்திரி மகனாயிற்றே) அரச சபைக்கு கொண்டு செல்கிறார்கள்.

வழியில் தெனாலி ராமன் காண்கிறார். சத்தமாக, வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்லியவாறே தன் வழியில் போகிறார். அதிலிருந்த அறிவைப் பிடித்து பிள்ளை தப்புகிறார். எப்படி? பூக்களைத் தின்று மீத்முள்ள சிறிய பாகங்களை வழியில் வீசுகிறார்.

ஒரே ஒரு காரணம் எல்லோருக்குமே தெரியும். வறுமைக் கோட்டைத் தாண்ட கல்வி ஒரு உபகரணம். வறுமைக் கோட்டை அடையாமலிருக்க கல்வி அல்லாத வேறு ஒன்றும் இல்லையா?
ஏன் இல்லை?
அரசியல் – கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதிக்க சுலபமான வழி.

எந்தக் கல்வியும் அவசியம் இல்லை.
தெருவுக்கு தெரு கட்சிகளுக்கும் தொண்டர்களுக்கும் குறைவில்லை. அதில் இடம் பிடிக்க பண பலம், உடல் பலம், பேச்சு சாமர்த்தியம் எல்லாமே ஓரளவு அவசியம் உண்டு.
அறிவில் அதிகமாக இருந்தால் அரசியல் இடம் பெற விருப்பம் இருக்காது.
அறிவில் அதிகம் குறைந்திருந்தால் ஒருவர் தொண்டராகலாம், ஓரளவு குறைவு வந்தால் தலைவராகலாம்.


குண்டர்களாவது – குறுக்கு வழியில் செல்வம் அடையும் வழி. குண்டர்கள், கூலிப்படை, கொலை கொள்ளை செய்யும் மக்கள் பலர் இன்று அரசியல் இல்லை. பலர் உழைத்துப் பெறும் காசை இவர்கள் உதைத்துப் பெறுவார்கள். வசதியாக வாழலாம்.

இதில் அவசியமாக கவனிக்க ~ வேண்டிய அம்சம்:

அடிதடி, கொலை, கொள்ளை இதில் ஈடுபட துணிச்சல் வேண்டும்.
மரணம் விடாமல் பின் தொடரும், பயப்படக்கூடாது.
ஒரு அரசியல் வாதியின் ஆதரவைத் தொடர்ந்து பெறுவதற்கு செய்யும் தொழிலில் வேறு ஒரு அரசியல் வாதியின் வெறுப்பைப் பெறலாம்.
கரணம் எப்படியும் தப்பலாம், மரணம் நிச்சயம் தப்பாது.
நாமில்லாமல் அர்சியல்வாதிகள் இல்லை என்று உணர்ந்த உடன், தானே அரசியல்வாதியாகும் ஆசை தலையெடுக்கும். அந்த நேரம் சூழ்நிலைகளைப் பொறுத்து, தலைவர் பதவியோ அல்லது ஈசுவர பதவி (மரணம்) இரண்டில் ஏதாவது ஒன்று கிடைப்பது நிச்சயம்.
போலீசோ பொதுமக்களோ, வேறு ஒரு குண்டரின் கையிலே இவர்கள் வாழ்க்கை முடிவு பெறும்.
இந்த தொழிலுக்கு மனச்சாட்சி, மனிதாபிமானம் எதுவும் பயனாகாது. அப்படி எதேனும் மிச்சம் மிகுதியிருந்தால் அவற்றைப் புதைத்து அதன்மேல் பலமான ஒரு மேடை எழுப்பிவிட்டு வரத் தேவையான மன பலம் சிலருக்கே வரும்.
அறிவு அறவே கூடாது. தொழில் தருமத்திற்கு அது எப்போதும் ஒத்துவராது.

சாதாதண மக்களாக வாழ்வது மிக மிக சுலபம். கல்வி அவசியம் இல்லை.
உழைக்க என்றும் உரிமை உண்டு.
கல்வியும் அதிகாரமும் உள்ளவர்கள் முன்னால் குனிந்து கைகட்டி நிற்கலாம்.
ஊதியிமில்லாமலும், குறைந்த ஊதியத்திற்கும் அளவில்லாமல் உழைக்கலாம்.
ஆபத்தான பிறர் பயப்படும் வேலைகளை தைரியமாகச் செய்யலாம்.
ஒருவேளை சோற்றிற்கும், சாராய பொட்டலத்திற்கும் அரசியல் ஊர்வலத்தில் பங்கேற்கலாம். துப்பாக்கி சூட்டில் சாகலாம். தியாகிப் பட்டம் பெறலாம்.
ஓட்டுப்போட ஐந்து வருடத்திற்கு ஒருமுறை Rs 500 லிருந்து Rs 3000 வரை கிடைக்கும் அதில் சில நாட்கள் சாராயத்தில் மிதக்கலாம்.
சாவின் விளிம்பிலேயே பிறந்து வாழ்ந்து மடிந்தாலும் சாவைக் கண்டு பயம் உண்டு.

கல்வி அதிகம் தேவையில்லாத பணம் கொழிக்கும் தொழில்கள்:

உதாரணம் சினிமா, கிரிக்கெட், சூதாட்டம்: இதை நம்பி நாசமாகும் – ஒரு சில கோடி மக்கள் கூட இருக்கலாம் – பலர் பகுதி நேரமாகவும், சிலர் முழு நேரமாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் இதில் குதிப்பதுண்டு. சில நூறு மக்கள் வெற்றி பெற்றேயாகவேண்டும். பல நூறு லட்சம் மக்கள் தோல்வியுடன் தொடரவேண்டும்.

என்னுடன் தொடர்பு கொள்ள 
080- 41212349
09686037729
பெங்களூரு

 

0 comments: