ஸ்மார்ட் வங்கி சேவை திட்டம் குறித்துவணிக தொடர்பாளர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்மார்ட் வங்கி சேவை திட்ட வணிக தொடர்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டலம் சார்பில் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 49 கிராமங்களில்"ஸ்மார்ட் வங்கி' சேவை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.


இந்த கிராமங்களில் இச்சேவைக்காக நியமிக்கப்பட்ட 49 வணிக தொடர்பாளர்களுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரி அஞ்சப்பர் ஓட்டலில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் புதுச்சேரி முதன்மை மண்டல மேலாளர் நடராஜன் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, இரண்டாயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள வங்கி வசதியில்லாத கிராமங்களில் ஸ்மார்ட் கார்டு வங்கி சேவை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வங்கியால் நியமிக்கப்பட்ட வணிக தொடர்பாளர்கள் எடுத்துச் செல்லக்கூடிய கருவி மூலம், கிராம மக்கள் வங்கிக்கு செல்லாமல், தங்கள் கிராமத்திலேயே 2, 000 ரூபாய் வரை பணம் எடுக்கவோ, செலுத்தவோ முடியும்.


தங்கள் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை மற்றும் கடைசி ஐந்து வரவு செலவுகளை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இரவு நேரங்களிலும் சேவை பெற முடியும். வரும் நவம்பர் மாத இறுதிக்குள் மேலும் 49 கிராமங்களில் ஸ்மார்ட் கார்டு வங்கி சேவை திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.முகாமை சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மைய அலுவலகத்தின் உதவி பொது மேலாளர் பாலசந்தர், முதன்மை மேலாளர் சித்தார்த்தன் மற்றும் டி.சி.எஸ்., அலுவலர்கள் நடத்தினர்.

 

0 comments: