பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கு இலவச வகுப்புடன் பயிற்சி


கோத்தகிரி:கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில், பள்ளியில் இடைநின்ற குழந்தைகளுக்கு, கோத்தகிரி விஸ்வசாந்தி பள்ளியில் இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன.கல்வி பயில ஆர்வம் இருந்தும், வறுமையால் செல்ல முடியாமல், இடைநின்ற சிறு வயது மாணவர்களின் நலன் கருதி, கோத்தகிரி விஸ்வசாந்தி பள்ளியில், "இலவச வகுப்புத் திட்டம்' துவக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச வகுப்புகளுடன், சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. திட்டத்தில் பயிற்சி பெறும் குழந்தைகள், 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வேலை தேடி, வட மாநிலங்களில் இருந்து பெற்றோருடன் வந்துள்ள குழந்தைகள், மொழிப் பிரச்னை காரணமாக கல்வி பயில முடியாமல் இருந்தாலும், திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்; விருப்பம் உள்ளோர், கோத்தகிரி விஸ்வசாந்தி மெட்ரிக்., பள்ளி முதல்வரை நேரிலோ அல்லது (04266) 272945 எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, பள்ளித் தலைவர் போஜராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

0 comments: