ரத்த தானத்தில் தமிழகத்திற்கு முதல் இடம் : சுகாதாரத்துறை செயலர் தகவல்

http://img.dinamalar.com/data/large/large_109646.jpg

ராஜபாளையம் : ரத்த தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளதாக, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் ராஜபாளையத்தில் பேசினார்.
ராஜபாளையம் ரோட்டரி டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பி.ஏ.சி., ராமசாமி ராஜா ரோட்டரி ரத்த வங்கி துவக்கவிழா மேனேஜிங் டிரஸ்டி ராமசுப்ரமணிய ராஜா தலைமையில் நடந்தது. முதன்மை செயலர் சுப்புராஜ் துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவிலேயே 92 சதவீத ரத்ததானம் தமிழகத்தில் தான் நடக்கிறது. முன்பு ரத்ததானத்தில் மே.வங்காளம் முதலிடத்தில் இருந்தது. தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகில் நான்கு கோடி பேர் எச்.ஐ. வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள். பல முறை சோதனை செய்தபின் தான் ரத்ததானம் சாத்தியம் என்ற நிலை உள்ளது. கல்வியில் முன்னேறிய விருதுநகர் மாவட்டம், சுகாதாரத்தில் பின்தங்கி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தானமாக பெற்ற ரத்தத்தை சேகரிக்க தமிழகத்தில் 150 சேகரிப்பு மையங்கள் உள்ளன. தமிழகத்தில் மெகா ரத்த வங்கி 400 கோடி ரூபாயில் செயல்படுத்தும் திட்டம் உள்ளது. விரைவில் வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், இணை இயக்குனர் அஜி கண்ணம்மாள், ரோட்டரி கவர்னர் குமார், துணைகவர்னர் செல்லையா முதலி, ராஜபாளையம் தலைவர் லட்சுமி நாராயணன், நிர்வாகிகள் பெரியண்ணன், ஷாஜஹான், செல்வ சண்முகம், டாக்டர்கள் ஜவஹர்லால், கோதண்டராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ரோட்டரி செயலாளர் வள்ளிநாயகம் நன்றி கூறினார்.

 

0 comments: