"வக்கீல் தொழிலின் மதிப்பை உயர்த்த சட்ட மாணவர்கள் பாடுபட வேண்டும்'

http://img.dinamalar.com/data/large/large_112843.jpg

சென்னை: "நாளுக்கு நாள் குறைந்து வரும் வக்கீல் தொழிலின் மதிப்பு, நற்பெயரை உயர்த்த எதிர்கால வக்கீல்களான சட்டக் கல்லூரி மாணவர்கள் பாடுபட வேண்டும்,'' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தார். தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், ரமாமணி நினைவு தேசிய அளவிலான வரிவிதிப்பு குறித்த மாதிரி கோர்ட் போட்டி நடந்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதி சத்தியநாராயணன் மாதிரி கோர்ட் போட்டியை துவக்கி வைத்தார்.


அவர் பேசுகையில், "முதல் முறையாக வரிவிதிப்பு தொடர்பான மாதிரி கோர்ட் போட்டி நடத்தப்படுகிறது. சட்டப் பல்கலை இத்தகைய போட்டிகளை தொடர்ந்து நடத்தும் என எதிர்பார்க்கிறேன். தற்போது வக்கீல் தொழில் மற்றும் வக்கீல்கள் மீதான நற்பெயர், மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. குறைந்து வரும் வக்கீல் தொழிலின் மதிப்பு, நற்பெயரை உயர்த்த எதிர்கால வக்கீல்களான சட்டக் கல்லூரி மாணவர்கள் பாடுபட வேண்டும்' என்றார்.


சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜேந்திரன் பேசுகையில், "வரிவிதிப்பு தொடர்பான விவாதிக்கும் போது, ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்கள் வெளிப்படும். வக்கீல்களுக்கு நேர்மை, துணிவு உள்ளிட்ட பண்புகள் இருந்தால், இத்தொழிலில் உயரத்தை எட்ட முடியும்' என்றார். சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பேசுகையில், "பொதுமக்கள் செலுத்தும் வரிப் பணம் இல்லாமல், நம் நாடு முன்னேறிய நாடாக உருவாக முடியாது. முன்பு எந்த படிப்பிலும் இடம் கிடைக்காதவர்கள் தான், சட்டப் படிப்பில் சேருவர். தற்போது சட்டப் படிப்பில் சேர போட்டி உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார். சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் ஈஸ்வர் ஆகியோரும் பேசினர்.

 

0 comments: