மனிதன் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துவாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்: நல்லக்கண்ணு

திருநெல்வேலி:எந்த விஷயமாக இருந்தாலும் மனிதன் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூ.,மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசினார்.எழுத்தாளர் நிலாவின் "உறைக்கும் உண்மைகள்' நூல் வெளியீட்டு விழா நெல்லை ஜங்ஷன் ஜானகிராம் ஓட்டலில் நடந்தது. இந்திய கம்யூ.,மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட, சாகித்ய அகாடெமி விருதுபெற்ற இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து நல்லகண்ணு பேசுகையில்,""சமீபகாலமாக மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.


மன அழுத்தத்தால் சோகத்தின் எல்லைக்கே மக்கள் சென்று விடுகிறார்கள். கலாச்சார மாற்றத்தால் சிலர் பழைய மரபுபடியும் வாழ முடியாமல், புதிய மரபுபடியும் வாழ முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இந்த சமுதாயத்தின் நடுத்தர மக்கள் தினமும் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் ஈழமக்களின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் தான்.மனிதன் அனைத்து விஷயங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும். அதைதான் தனது கதையில் நிலா கூறியுள்ளார்.''என்றார்.


தி.க.சிவசங்கரன் பேசுகையில்,""இங்கிலாந்தில் மக்களிடம் சமூக விழிப்புணர்வு உள்ளதாக நிலா கூறியுள்ளார். இந்திய மக்களிடம் தான் விழிப்புணர்வு இல்லை. எழுத்தாளர்களுக்கு உணர்வு இருப்பது அவசியம். அது இல்லாத எழுத்தாளர்களை நான் மதிப்பது இல்லை.''என்றார்.விழாவில், பேராசிரியர்கள் ராமச்சந்திரன், மயன் ரமேஷ், ராஜா, வரலாற்று ஆராய்ச்சியாளர் திவான், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் நாறும்பூ நாதன், ஜானகிராம் ஓட்டல் உரிமையாளர் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

0 comments: