புத்தகம் படிப்பது இன்றும் குறையவில்லை : சரசுவதி மஹால் நூலக காப்பாளர் பெருமிதம்

தஞ்சாவூர்: ""புத்தகம் படிப்பது இன்றும் குறையவில்லை. அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருகிறது,''என சரசுவதி மஹால் நூலக காப்பாளர் பேசினார். தஞ்சாவூரில் நடந்த பாவேந்தர் நூலக முதலாமாண்டு நிறைவு விழாவில், ராசவேலு வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.


முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் பேசியதாவது: கடந்த 4,000 ஆண்டுக்கு முன் எகிப்தில் முதல் நூல்கள், நூலகம் உருவானது. கோவில், அரசர்களின் இருப்பிடம், அரண்மனைகளில் அவை இருந்தன. களிமண்ணில் எழுதினர். அரசர், கடவுள் குறித்த தகவல்கள் இடம் பெற்றன. எகிப்தில்தான் முதல் பேப்பர் உருவாக்கி எழுதினர். பின், தோலில் எழுதினர். ஜுலியர் சீசரின் தளபதி ரோமாபுரியில் உலகில் முதல் பொது நூலகத்தை உருவாக்கினார். பின், ஆசியாவில் அவை பரவியது. நூல்களின் மீது அதிக ஈர்ப்பு இருந்ததால் லண்டன் நூலகத்தில் 70 லட்சம் நூல்கள் இருந்தன. இந்தியாவில் வேதங்கள் எழுதப்பட்டன. பல மொழிகளில் இருந்தவை மற்ற மொழிகளுக்கு மாற்றி எழுதப்பட்டன. தமிழக அரசு தற்போது நூலகப்பணியில் சிறப்பாக செயல்படுகிறது. மிகப்பெரிய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டதுடன், கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


சரசுவதி மஹால் நூலக காப்பாளர் பெருமாள் பேசியதாவது: பட்டறிவு ஆரம்பத்தில் நேரடியாக கூறப்பட்டும், பிற சந்ததியினரும் அறிய வேண்டுமென எழுத்தில் பதிவு செய்தனர். மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததால் கல்லில் எழுதினர். கல்லை பிற இடம் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் செங்கலிலும், ஆற்றங்கரை பகுதியில் மக்கள் வசித்ததால் மண்ணை தட்டாக்கி, ஓடுகளாக்கி பதிவு செய்தனர். ஓடுகள் உடைந்ததால் காரியம், வெள்ளி, தங்கம், செப்பு போன்றவைகளில் எழுதினர். கடந்த 1620ல் தஞ்சையில் ரகுநாத நாயக்கர் டென்மார்க்குடன் செய்து கொண்ட ஒப்பந்த தங்கத்தகடு இன்னும் உள்ளது.


எழுதுவதை எளிமையாக்குதல், வளர்ச்சியால் மூங்கில், மரம் மற்றும் தாவரங்கள், பேப்பரில் எழுதினர். இந்தியா அதிக வெப்பம், வெளிச்சமான நாடு. இங்கு வடமாநிலங்களில் மரத்திலும், தென்மாநிலங்களில் ஓலைச்சுவடிகளிலும் எழுதினர். நமக்கு 4,000 ஆண்டுக்கு முந்தைய ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன. இவை 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபதிவு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள் சுவடிகளை மறுபதிப்பு செய்தல், பாதுகாத்தலை செய்தனர். முற்காலத்தில் மன்னர்கள் போரின்போது, பிற மன்னரின் அரண்மனையை முற்றிலும் தீயிட்டு நாசப்படுத்தியதால் நமக்கு பல அரிய பதிவுகள் கிடைக்காமல் போனது. சரபோஜி போன்ற மன்னர்கள் பிரிட்டிஷ் அரசுடன் இணக்கமாக இருந்ததால் சரசுவதி மஹால் நமக்கு கிடைத்தது.


நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனால் பொது நூலக சட்டம் உருவாக்கப்பட்டது. புத்தக வழங்கு சட்டத்தால் இந்தியாவில் வெளியாகும் நூல்களில் நான்கு பிரதிநிதிகள் கட்டாயமாக கொல்கத்தா தேசிய நூலகம், சென்னை கன்னிமாரா நூலகம், மும்பை மத்திய நூலகம், டில்லி பொது நூலகம் ஆகியவற்றுக்கு அனுப்ப வேண்டுமென்றானது. இங்கு புத்தகங்களின் பட்டியல் உள்ளன. புத்தகம் படிப்பது இன்றும் குறையவில்லை. அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருகிறது. குறுந்தகடு வடிவில் கூட வெளியிடப்படுகிறது. கலைக்களஞ்சியம், அகராதி, பயணக்கட்டுரை, வரைபடம் போன்றவைகள் அதிகமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவை பயனுடையதாகும். இவ்வாறு அவர் பேசினார். தலைவர் மணிவாசகம், நிர்வாகக்குழு உறுப்பினர் தில்லைராஜ், கவிஞர் சித்தார்தன், முன்னாள் செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பேசினர். தணிக்கையாளர் ஜெயகுமார் நன்றி கூறினார்.

 

0 comments: