தமிழகத்தில் 40 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு அறிவியல் பூங்கொத்து புத்தகங்கள் வழங்க நடவடிக்கை


திருநெல்வேலி : தமிழகத்தில் 40 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவியல் பூங்கொத்து புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவியல் கருத்துக்களை கதைகள் மூலம் விளக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் செயல் வழி கற்றல் முறையை மேலும் செம்மைபடுத்தவும், தொடக்க வகுப்பு மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தவும் 2008-09ம் ஆண்டில் புத்தக பூங்கொத்து திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் குழந்தைகளை கவரும் வகையில் பல வண்ண படங்களுடன் கூடிய தர வரிசைப்படுத்தப்பட்ட வாசிப்பு புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அறிவியல் கருத்துக்களை எளிய கதைகள் மூலம் விளக்கும் புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தயார் செய்யப்பட்டு அறிவியல் பூங்கொத்து வரிசை என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புத்திசாலி ராமு, காண்போமா கால்தடம், வளரும் வண்ணத்து பூச்சி, முத்தான முக்கனிகள், பருத்தியும் பட்டும், தென்னையும் பனையும், மரம் தரும் வரம் உட்பட பல்வேறு தலைப்புகளில் இயற்கையை பற்றியும், அன்றாட வாழ்வில் நடக்கும் எளிய அறிவியல் நிகழ்வுகள் பற்றியும் எளிய நடையில் கதைகளாக புத்தகங்கள் பல வண்ண படங்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம்: நெல்லை மாவட்டத்தில் 1,895 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்புத்தகங்களை செயல் வழி கற்றல் வகுப்பறையில் மாணவர்களுக்கு எட்டும் வகையில் கம்பிகளில் தொங்க விட்டு மாணவர்களை தொடர்ந்து பயன் பெற செய்ய வேண்டும் என கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஜெசோலைட் செல்வி தெரிவித்தார்.

 

0 comments: