நேரத்தை தவற விடாமல் படித்தால் கூடுதல் மதிப்பெண் : பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அறிவுரை

ஊட்டி : "நேரத்தை தவற விடாமல் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்' என, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் கூறிய கருத்துகள்: விவேகானந்தன் (தமிழ்), தம்பு மேல்நிலைப் பள்ளி, கோவை: பாடப் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்கள், இலக்கிய நயம் பாராட்டல் பகுதியை நன்றாகப் படிக்க வேண்டும். முக்கிய குறிப்புகளை கருப்பு மையால் அடிகோடிட்டு காட்ட வேண்டும்; இலக்கண குறிப்பு எழுதும் போது, சொல்லை எழுதி, அதற்குரிய இலக்கணக் குறிப்பு எழுத வேண்டும். மனப்பாடப் பகுதியை படித்து எழுதிப் பார்க்க வேண்டும். விடைகளை பல முறை எழுதிப் பழகுவதால், எழுத்துப் பிழையை தவிர்க்க முடியும்; தெரிந்த வினாவுக்குரிய விடைகளை முதலில் எழுத வேண்டும்.


சுப்புலட்சுமி (ஆங்கிலம்), ஏ.வி.பி., மேல்நிலைப்பள்ளி: வேலை வாய்ப்பு பெற்று, சிறந்த எதிர்காலத்தை நாட ஆங்கில மொழி மிகவும் அவசியம். கட்டுரைகள் எழுதும் போது துணைத் தலைப்புகள் இடுவது அவசியம். பாடல்கள் எழுதும் போது, தலைப்புடன் எழுதுவது, முழு மதிப்பெண் பெற உதவும்; ஆங்கில இலக்கணங்களை அடிக்கடி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். விடைகள் அழகாக, தெளிவாக இருக்க வேண்டும்.


கண்ணன் (கணிதம்), ஏ.வி.பி., மேல்நிலைப்பள்ளி: தினமும் கணக்குப் பாடத்தை பயிற்சி செய்ய வேண்டும். அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்; நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். முக்கிய சூத்திரங்களை பல முறை எழுதிப் பார்த்து, மனதில் நிறுத்த வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 கணக்குப் பாடங்கள் தான், பொறியியல் படிப்புக்கே அடிப்படை. கணக்கில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிப்பது அவசியம். கடந்தாண்டு, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் கணிதப் பாடத்தில் 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்த மாணவர்கள், கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கணிதத்தில் அனைத்துப் பாடங்களில் உள்ள கணக்குகளை எழுதிப் பார்க்க வேண்டும்; அப்போது தான் "சென்டம்' பெற முடியும்.


குணசேகர் (இயற்பியல்), ஏ.வி.பி., மேல்நிலைப்பள்ளி: இயற்பியல் பாடத்தில் வெற்றி பெறுவது மிக எளிது; அதிக மதிப்பெண் பெறுவதற்கு, மாணவ, மாணவியர் முயற்சி எடுக்க வேண்டும். பாடங்களை முழுமையாக படிப்பதால், அனைத்து ஐந்து மதிப்பெண் வினாவுக்கும் விடையளிக்க முடியும். 3 மதிப்பெண் வினாவுக்கு விடையளிக்க, அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்; முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை, மாணவ, மாணவியரே தயாரித்து, தொடர்ந்து படிக்க வேண்டும். புத்தகத்தை முழுவதுமாக புரட்டுவதால், 200க்கு 200 மதிப்பெண் பெறுவது எளிது.


அசோக்குமார் (வேதியியல்) ஏ.வி.பி., மேல்நிலைப்பள்ளி: வேதியியல் படித்தால் வேலை வாய்ப்பு நிச்சயம். நமது வாழ்வியல், வேதியியலால் அடங்கியது. படிக்கும் நேரத்தை நிர்ணயித்து படிப்பதால், வேதியியல் பாடத்தில் சாதிக்க முடியும். இப்பாடம் கடினமானதாக இருந்தாலும், திட்டமிட்டு, தேர்வு செய்து படித்தால் வெற்றி சுலபம்.


ரூபா (உயிரியல்): ஏ.வி.பி., மேல்நிலைப்பள்ளி: உயிரியல் பாடத்தில் மதிப்பெண் தவறவிடுவதால், மருத்துவப் படிப்புக்கு செல்வோருக்கு, இடம் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் படித்தால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும். வினாவுக்குரிய விடையை குறிப்பிட்ட அளவு எழுதினால் போதும்.


நீலகண்டன் (பொருளியல்): ரங்கநாதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: பொருளியல் பாடத்தை பிரதான பாடமாக படித்தவர்கள், "இந்திய பொருளியல் சர்வீஸ்' துறை சார்ந்த தேர்வெழுதி, பொருளாதார வல்லுனர்களாக வர முடியும்; நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஆற்றலை அவர்களால் பெற முடியும். பொருளியல் தேர்வில், நேரத்தை திட்டமிட வேண்டும்; வரைபடம் உள்ள வினாக்களை தேர்வு செய்து எழுதினால், கூடுதல் மதிப்பெண் பெற முடியும்.


சிங்காரவேலன் (அக்கவுண்டன்சி, வணிகவியல்): ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய, சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி: அக்கவுண்டன்சி பாடத்தை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு மதிப்பெண் வினாவுக்குரிய விடை மறக்காமல் இருக்க, சக மாணவர்களுடன் தினமும் சொல்லி பார்க்க வேண்டும். பிரிவு, வினா எண்களை மாற்றி, மாற்றி எழுதுவதை தவிர்க்க வேண்டும். விடைத் தாள்களின் வரிசை எண்களை தவறாமல் எழுத வேண்டும்; வரிசை எண் எழுதாமல், குழம்பி தவிக்கும் மாணவர்களை, தேர்வு அறைகளில் பார்க்க முடிகிறது. வணிகவியல் பாடத்தை பொறுத்தவரை, தெளிவாக, அழகாக எழுதுவதால், கூடுதல் மதிப்பெண் பெற முடியும். பெரிய வினாக்களுக்கு, துணை தலைப்புகள் இட்டு எழுத வேண்டும்;


சுரேஷ்குமார் (கம்ப்யூட்டர் அறிவியல்): ஏ.வி.பி., மேல்நிலைப்பள்ளி: ஷாட் கட் கீ மிக முக்கியம்; தொடர் பயிற்சி செய்வது அவசியம்; அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். விடைகளில் உள்ள முக்கிய குறிப்புகளை அடிகோடிட்டு காட்ட வேண்டும்.

 

0 comments: