இலக்கை தேர்வு செய்து தன்னம்பிக்கையுடன் மாணவர் ஈடுபட வேண்டும்

ராசிபுரம்: ""மாணவர்கள் ஒரு இலக்கை தேர்வு செய்து அதற்கான செயலில் தன்னம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும்,'' என, பாவை கல்வி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில், சென்னை மைண்ட் பவர் நிறுவனர் ரேகாஷெட்டி பேசினார். ராசிபுரம் பாவைக் கல்வி நிறுவனம் சார்பில், "வெற்றியை அடையும் யுத்திகள்' என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்துது. கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். மாணவர் பிரம்மநாதன் வரவேற்றார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார்.


சென்னை மைண்ட் பவர் நிறுவனர் ரேகா ஷெட்டி பேசியதாவது: மனிதர்கள் ஒவ்வொருக்கும் போதிய மனஆற்றல் உள்ளது. அதை பயன்படுத்துவதில் தான் ஒருவருடையை வெற்றி அமைகிறது. இந்த ஆற்றலை கொண்டு இலக்கை அடையும் வரை செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா 2020ல் உலக நாடுகளில் முதன்மை நாடாக திகழும். அதற்கு நமது மனித ஆற்றலே காரணமாக அமையும். உலகின் சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் மாணவர்களிடம் தான் உள்ளது. மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களின் செயல்களை எண்ணிப்பார்க்க வேண்டும். மாணவர்கள் ஒரு இலக்கை தேர்வு செய்து அதற்கான செயலில் தன்னம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும்.


தங்களை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பார்ப்பது தேவையற்றது. மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட வேண்டும். நமது இந்திய கலாச்சாரம், கூட்டு குடும்ப வாழ்க்கை போன்றவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீர்வளம், நிலவளம் போன்ற இயற்கை வளங்களை அழித்துவிட்டு, வாழ்வதால் என்ன பயன் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். வாழ்க்கை மரம் போன்றது. நிலைத்து நின்று தான் வளரும். அது போல், அவசர அவசரமான வாழ்க்கை செயல்பாடுகளால் எப்படிப்பட்ட வாழ்க்கை உருவாகும் என எண்ணி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: