கிராமப்புற மருத்துவமனையில் பணியாற்ற முன்வர வேண்டும் : மருத்துவர் வேண்டுகோள்

திருச்செங்கோடு: ""கிராமப்புற மாணவர்கள் உயர்ந்தால் நாடு வளம் பெறும். படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற முன் வரவேண்டும்,'' என, கே.எஸ்.ஆர்., கல்லூரியில் நடந்த விழாவில், மருத்துவ கல்வித்துறை இயக்குனர் கனகசபை பேசினார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லூரி 2வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்புசெழியன் வரவேற்றார். துணைச் செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். முதல்வர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மருத்துவ கல்வி இயக்குனர் கனகசபை பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி பேசியதாவது:


குடும்ப உறவுகள் தான் இந்திய நாட்டின் மிகப்பெரிய பலம். 100 வயதிலும் படிக்கலாம். ஒருவருக்கு குணம் தான் முக்கியம். படிப்பு இரண்டாம் பட்சம் தான். ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டே இருக்க வேண்டும். படித்து பட்டம் பெற 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். சிறந்த மருத்துவர் என்ற பெயர் எடுக்க 100 சதவீதம் பெற வேண்டும். நம்மை நாடி வருபவர்களிடம் மென்மையாக பழக வேண்டும். மக்கள் மருத்துவர்களை கடவுளாக கருதுகின்றனர். காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். மருத்துவத் துறை சேவைத்துறை என்பதை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும். சுதந்திரத்துக்கு முன் மனிதனின் சராசரி வயது 45ஆக இருந்தது. தற்போது 65 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 85 வயது வரை வாழ்பவர்கள் அதிகரித்துள்ளனர்.


வரும் காலத்தில் 100 வயது என்பது சர்வசாதாரணமாகும் நிலை உள்ளது. எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக வாழவேண்டும். 16 வயதில் இருதயநோய், 20 வயதில் சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்கள் வருகிறது. கனவுகள் நிறைவேறாத போது தொடர்ந்து முயற்சிக்காமல் இளைஞர்கள் தவறான முடிவை தேடுகின்றனர். நோய்களுக்கான மூலகாரணம் மனம் பாதிக்கப்படுவதுதான். மனதை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைந்தால்தான் பன்றிக்காய்ச்சல், சிக்குன் குன்யா போன்ற நோய்கள் நம்மை தாக்குகிறது. கிராமப்புற மாணவர்கள் உயர்ந்தால் நாடு வளம் பெறும். படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற முன் வரவேண்டும். அரசு அனைத்து கிராம மருத்துவமனைகளிலும் பல் மருத்துவ பிரிவு துவங்க உள்ளது. அதனால் அரசு வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு அரசு நிறைய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அன்புசெல்வன், முருகேஷ், சகுந்தலா, மணிமாறன், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: