ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை

திருப்பூர்: ""கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வரும்போது, நாடு முழுவதும் ஒரு கோடி ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுவர்,'' என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலை துணைவேந்தர் பத்மனாபன் பேசினார். திருப்பூர், அமராவதிபாளையம் டி.கே.டி., ஆசிரியர் கல்வியல் கல்லூரியில் முதலாவது பி.எட்., பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் சசிகலா பர்வீன் வரவேற்றார். தாளாளர் சவுகத் அலி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மனாபன் முன்னிலை வகித்தார். கல்லூரியில் ஓராண்டு பி.எட்., படித்த 96 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரியின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் பெரியசாமி வாசித்தார். துணைவேந்தர் பத்மனாபன் பேசியதாவது: கல்வி பயின்றவர்களே சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை பெறுகின்றனர். அடிப்படை கல்வி ஒரு குழந்தையை ஒழுக்கம் உடையவனாக உருவாக்குகிறது. வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, புதிய சிந்தனை வளர்த்து வளம் பெறுவதற்கு உயர்கல்வி வழிகாட்டுகிறது. சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது கல்வி வளர்ச்சி மட்டுமே. வரும் ஆண்டுகளில் நாடு முழுவதும் கட்டாயக்கல்வி திட்டத்தை அமலாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக, பல்கலை மானியக்குழு, இந்திய தேசிய ஆசிரியர் குழு இணைந்து ஆய்வு நடத்தியது. இதில், நாடு முழுவதும் எதிர்காலத்தில் பணிபுரிய ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டது. தற்போது, 50 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியில் உள்ளனர். ஆசிரியர் படிப்பு படித்தவர்கள், பணிபுரிபவர்களுக்கு சமுதாயத்தில் தக்க மதிப்புள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன், ஆசிரியராக நான் இருந்தபோது, கல்வி கற்பிக்க காரணியாக ஆசிரியராக ஒருவர் மட்டுமே இருந்தார். தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், கல்வி கற்பிக்கும் காரணிகளில் ஆசிரியரும் ஒருவர் என்று நிலை மாறிவிட்டது. பள்ளிக்கு மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் வரும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். நல்ல குணங்களால், நம்மை மாணவர்கள் மதிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். மனிதனை மனிதனாக ஆக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. இப்பணியில் மன அழுத்தம் இல்லை என பலரும் நினைக்கலாம்; மன அழுத்தம் இல்லாத பணி என எப்பணியும் கிடையாது. படித்தவர்கள் கட்டாயம் வேலை பெற தகுதி உடையவர்கள். ஆகவே, கல்வியை ஊக்குவிப்பதில் முழு ஈடுபாடு கட்ட வேண்டும்.இத்தகைய புனிதமான ஆசிரியர் பணியின்போது சில ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் வன்முறையாக நடந்து கொள்வதாக செய்தித்தாள், "டிவி'களில் செய்தி வெளிவரும்போது, அதை கண்டு மனம் வேதனை அடைகிறது. அவ்வாறு இல்லாமல் நீங்கள் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். வேதனை இருப்பின், அதை குழந்தைகளிடத்தில் காட்டக்கூடாது, என்றார்.
விழாவில், "டெக்மா' கோவிந்தசாமி, கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: