உ.பி., மாநிலத்தில் இங்கிலீஷுக்கு கோவில்

லக்னோ : உத்தர பிரதேசத்தில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு "ஆங்கில தேவி' என பெயரிடப்பட்டுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சினிமா நடிகைகளுக்கு கோவில் கட்டப்படும் நடைமுறை உள்ளது. அதேபோல், வட மாநிலங்களிலும் கோவில் கட்டும் கலாசாரம் துவங்கியுள்ளது. ஆனால், இவர்கள் சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோவில் கட்டுகின்றனர். உத்தர பிரதேசத்தில் கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆங்கில தேவி என்ற பெயரில், ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்த கோவில் கட்டப்படுகிறது. கம்ப்யூட்டர் போன்ற மாடலில் இந்த கோவில் கட்டப்படுகிறது.


இதுகுறித்து கோவிலை கட்டி வரும் பொதுமக்கள் கூறியதாவது: ஆங்கில மொழி, தற்போது அத்தியாவசியமாகி விட்டது. ஆங்கில மொழியை கற்றவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, அதை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கோவில் கட்டப்படுகிறது. மற்ற கோவில்களில் வழக்கமாக எந்த முறையில் வழிபாடு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் இந்த கோவிலிலும் வழிபாடு நடக்கும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். "உ.பி.,யில், கடவுள் அல்லாத விஷயத்துக்காக, கோவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை' என, அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

0 comments: