"மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்ற வேண்டும்"

மதுரை: மதுரையில் "பல்மோகான்-2010' என்னும் நுரையீரல் நோய் கருத்தரங்கு நேற்று நடந்தது. போலீஸ் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் தலைமை வகித்து பேசுகையில், ""நோய் தீர்க்கும் மருத்துவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். அவர்கள் ஏழைகளுக்கு சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்ற வேண்டும்,'' என்றார். அப்போலோ ஆஸ்பத்திரியின் ஆஸ்துமா, நுரையீரல் நோய் நிபுணர் எம்.பழனியப்பன் வரவேற்றார். டாக்டர்கள் நவநீதகிருஷ்ணன், ரோஹிணி ஸ்ரீதர், வடிவேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் நுரையீரல் நோய் தொடர்பான அடிப்படை பரிசோதனைகள் குறித்து டாக்டர் நாகராஜ் பேசினார். "நுரையீரலில் மூச்சுக்காற்று சென்று வருவது, நுரையீரலின் தன்மை குறித்து தெரிந்து கொள்ள "ஸ்பைரோமெட்ரி' கருவி பயன்படுகிறது. ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., போன்ற நோய்களின் தன்மை குறித்து இதில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்' என அவர் தெரிவித்தார். "சாதாரணமாக வயது வந்தோர், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் இந்நோய், ஒரு தொற்று நோய். சமீபத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பன்றிக்காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அடிப்படையாக உள்ளது,'' என டாக்டர் தாமஸ் தெரிவித்தார்.
ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னையுடன் தொடர்புடைய காது, மூக்கு, தொண்டை பிரச்னை குறித்து விளக்கப் படங்களுடன் டாக்டர் மீனா பிரியதர்ஷினி பேசினார். மேலும், தூங்கும்போது குறட்டைவிடுவதும் நுரையீரல் தொடர்பான பிரச்னையே. குண்டாக இருப்பது, துரிதஉணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்னை ஏற்படுகிறது என்றும், புகைபிடித்தல் மற்றும் மாசுபடுதல் காரணமாக ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., நோய்கள் ஏற்படுவது, அதற்கு இன்ஹேலர்களின் பயன்பாடு குறித்தும் கருத்தரங்கில் நிபுணர்கள் பேசினர்.
நுரையீரல் நோய்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நவீன பரிணாமங்கள், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் பிரச்னைகள் குறித்தும் நிபுணர்கள் கலந்துரையாடினர்.

 

0 comments: