சிதம்பரம் அறக்கொடை விருது: 3 அறிஞர்கள் கவுரவிப்பு

சென்னை: எம்.ஏ.சி., அறக்கொடை நிறுவனத்தின் சார்பில், மூன்று அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. எம்.ஏ.சிதம்பரம் அறக்கொடை நிறுவனத்தின் சார்பில், 2010ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. எழுத்தாளர் பூவண்ணனுக்கு ராஜா அண்ணாமலை செட்டியார் விருதும், சிற்பக் கலைஞர் மணி நாகப்பாவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதும், கல்வியாளர் தாமசுக்கு ஏ.சி.முத்தையா விருதும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி, விருதுகளை வழங்கிப் பேசியதாவது: கலை, கலாசாரம் போன்றவற்றில் சிறந்து விளங்குவோருக்கு, அரசு மட்டும் உரிய மரியாதை கொடுத்தால் போதாது. தனியார் அறக்கட்டளைகளும் கவுரவிக்க வேண்டும். கதகளி, பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய கலாசாரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். 3,575 இந்தியக் கலைகள் மட்டுமின்றி, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கலைச் சின்னங்கள் பாதுகாக்கப் படவேண்டியுள்ளது. இளம் சந்ததிகள், பழைய கலைகளை அறியச் செய்ய வேண்டும். கலையும், கலாசாரமும்தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் முத்தையா, தேவகி முத்தையா, அஸ்வின் முத்தையா, ஆர்.எம்.வீரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

0 comments: