தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளில் 3.25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்

மதுரை: "தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளில் 3.25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்,'' என மதுரையில் சாப்ட்வேர் இன்டஸ்டிரீஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன்(சிடா) துவக்க விழாவில் "நாஸ்காம்' மண்டல இயக்குனர் புருசோத்தமன் குறிப்பிட்டார். விழாவிற்கு தலைமை வகித்து சிடா தலைவர் சிவராஜா பேசியதாவது: மதுரையில் தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்காட் போன்ற அரசு நிறுவனங்கள், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களிடமிருந்து புரோகிராம்களை பெறுகின்றனர். மதுரை நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மதுரை போன்ற தென் மாவட்ட சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். சாப்ட்வேர் உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், தென் மாவட்ட இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும், அவர்களது ஆங்கில புலமையை வளர்க்க பயிற்சி பட்டறைகளை நடத்தவும், சிடா நடவடிக்கை எடுக்கும். வெளிநாட்டு முதலீடுகளை தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


"நாஸ்காம்' இயக்குனர் புருசோத்தமன் "தகவல் தொழில் நுட்ப துறையின் இன்றைய போக்கு' குறித்து பேசியதாவது: தென் மாவட்டங்களில் 70 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. சாப்ட்வேர் துறையில் இருக்கும் புதிய வாய்ப்புகள், வியாபார யுக்திகள், அரசு துறைகளுடன் வர்த்தக தொடர்பு மேற்கொள்வது குறித்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு "நாஸ்காம்' உதவுகிறது. எதிர்காலத்தில் மதுரை போன்ற சிறிய நகரங்களிலும் சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏராளமாக துவங்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு தேவையான நிலம், இன்ஜினீயர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.25 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகின்றனர். இவர்களில் 20 சதவீதம் பேர் தென் மாவட்டத்தினர், என்றார்.


துணை தலைவர்கள் கதிர்காமநாதன், அஷ்வின் தேசாய், வரதராஜன், ராதாகிருஷ்ணன், பாண்டியன், சிவக்குமார் பேசினர். ஒருங்கிணைப்பாளர் சேஷகாஸ் கான் நன்றி கூறினார்.

 

0 comments: