உடற் பருமனை குறைக்க நானோ தொழில் நுட்பம்

கோவை: நானோ தொழில்நுட்பத்தில் உடலின் மேற் பகுதியில் கருவியை வைத்தாலே உடலின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ளலாம். உடல் பருமனை குறைக்க நானோ தொழில் நுட்பத்தில், நானோ லேசரை பயன்படுத்தி சர்ஜரி செய்யலாம் என்று விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறினார். கோவை ஜெம் மருத்துவமனையில் உலக உடல் பருமன் நாளையொட்டி "பைன் பெதர் பவுண்டேசன்' திறக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மத்திய ராணுவ ஆராய்ச்சி பாதுகாப்பு மைய தலைவர் சிவதாணுபிள்ளை , டாக்டர் பழனிவேலு எழுதிய உடல்பருமன் என்ற புத்தகத்தை வெளியீடு செய்து பேசியதாவது:


மனிதன் உலகில் தோன்றி 10 ஆயிரம் ஆண்டுகளாகிறது. உலகம் உருண்டை என்று முதலில் சொன்னது இந்திய விஞ்ஞானிகள். அல்ஜீப்ரா, திரிகோனமிதி கணிதங்களை கற்றுத்தந்தவர்களும் இந்தியர்கள். அணுச்சோதனையை மற்ற நாடுகள் செயல்வடிவாக முதன்மையாக சோதித்து உலகிற்கு காட்டியிருந்தாலும், அதை முதலில் கண்டுபிடித்தது இந்தியர்களே. அன்றைய மன்னராட்சியில், மூக்கை அறுத்து தண்டனை கொடுத்த போது, அறுபட்ட மூக்கை ஓட்டி, அறுவை சிகிச்சை செய்து தயார் செய்தவர் சுஸ்ரதி என்ற டாக்டர். அவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இன்றைய பிளாஸ்டிக் சர்ஜரி. அப்போது அறுவை சிகிச்சை செய்து சரிசெய்த பின்பு இரு தோல்களையும் தைப்பதற்கு எறும்பை தோலின் மீதுள்ள ரத்தத்தை சுவைப்பதற்கு அனுமதிப்பர். ரத்தத்தை எறும்பு சுவைக்கும் போது அதன் தலை வெட்டப்பட்டு முடிச்சு விழுந்தது. அதன் மூலமே மருத்துவத்தையல் பிறந்தது. இந்தியாவில் நியூக்ளியர் சோதனை, விண்வெளிஆய்வுகள், ஏவுகணை சோதனை ஆகியவை நாட்டின் பாதுகாப்பிற்காகவும், அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியை பறை சாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய இடம் பிடிப்பது சூப்பர்சானிக், பிரம்மோஸ் ஆகியவை. நியூக்ளியர் தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்பு பணிக்காக மேற்கொண்டாலும், ஒரு வகையில் மருத்துவத்துறையில் பல அறுவை சிகிச்சைகளுக்கு உதவியாக இருந்து வருகிறது. டெலிமெடிசன் மூலம் அப்பல்லோ மருத்துவமனை நம் நாட்டின் தொலை தூரத்தில் உள்ள பல்வேறு தீவுகளிலுள்ள மருத்துவமனையில் தொடர்பு ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சையளித்து வருகிறது. அதன் படி நாடு முழுக்க 16 மருத்துவமனைகளும், 16 மொபைல் கிளீனிக்குகளும் செயல்படுகின்றன. டெலிஎஜுகேஷன் மூலம் 216 கல்வி மையங்களும், 473 கிராம வள மையங்கள் செயல்படுகிறது. இதன் வாயிலாக கிராம மக்கள் நாட்டு நிலவரங்களை எளிதாக தெரிந்து கொள்கின்றனர். செயற்கைக்கோளின் உதவியோடு மீனவர்கள் எளிதாக காலநிலை அறிந்து மீன்பிடிப்பதற்கு செல்கின்றனர். மொபைல் போன் உதவியோடு இ-மார்க்கெட்டிங் செய்து மீன்களை பிடித்தவுடன் கடலிலேயே விற்பனை செய்கின்றனர். அக்னி ஏவுகணை தொழில் நுட்பத்தின் பயனாக உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கைக் கால்கள் குறைந்த எடையில் தயாரித்து வழங்கப்படுகின்றன. இதை தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் கேட்கின்றன. புதிய நானோ தொழில் நுட்பத்தில் எந்த தேவைக்கும் மருந்து தயாரித்து கொடுக்கலாம். இதற்காக திசுவளர்ப்பு சோதனைகள் நடந்து வருகின்றன. நானோ தொழில் நுட்பத்தில் உடலின் மேற் பகுதியில் கருவியை வைத்தாலே நம் உடலின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ளலாம். உடல் பருமனை குறைக்க நானோ தொழில்நுட்பத்தில், நானோ லேசரை பயன்படுத்தி சர்ஜரி செய்யலாம். இது போன்ற தொழில் நுட்பங்கள் விரைவில் அறிமுகமாகும் என்றார்.


கலெக்டர் உமாநாத், ஜெம் மருத்துவமனை டாக்டர் பழனிவேலு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், டாக்டர்கள் பிரவீன், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: