"பிளஸ் 2 வரையிலான கல்வி மாணவர் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்'

http://img.dinamalar.com/data/large/large_112295.jpg

சென்னை: "ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான கல்வி, மாணவர்களின் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போன்றது,'' என, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழக "ரோட்ராக்ட்' சங்கம் சார்பில், சென்னை மற்றும் சுற்றுப்புற அரசு பள்ளிகளின் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான, "விழித்திரு' வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் அரசு பொதுத் தேர்வை சந்திக்க உதவும் இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர்ஜவகர் பேசியதாவது: மாணவர்களின் வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். முதல் பருவம், ஏட்டாம் வகுப்பு வரை உள்ள வாழ்க்கை; இரண்டாம் பருவம், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள வாழ்க்கை; மூன்றாம் பருவம், கல்லூரி வாழ்க்கை. முதல் பருவத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை கட்டுப்படுத்த முடியும். இரண்டாம் பருவத்தில், "மாணவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும். ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு என்ன தெரியும்' என நினைப்பர். இரண்டாம் பருவத்தில் மாணவர்களுக்கு படிப்பு மிகவும் அவசியமானது. இந்த பருவத்தில் கற்கும் கல்வி, மாணவர்களின் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்(பவுண்டேஷன்) போன்றது. "பவுண்டேஷன்' சிறப்பாக இருந்தால், 40 மாடி கட்டடம் கூட கட்டலாம். இப்பருவத்தில் கற்கும் கல்வி சிறப்பாக இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த பருவத்தில் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் பெற்றால், ஆசிரியர் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ள நல்ல கல்லூரிகளில் சேர முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் இதை மனதில் வைத்து, மீதமுள்ள நாட்களில் நன்கு படிக்க வேண்டும். இவ்வாறு மன்னர்ஜவகர் பேசினார்.


"ரோட்டரி கிளப்' மாவட்டம் 3,230 கவர்னர் ஒளிவண்ணன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். மாணவர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, தன்னம்பிக்கையை வளர்த்து வெற்றி பெறுவது தொடர்பாக ரமேஷ்பிரபா மற்றும் நடிகர் தாமு ஆகியோர் பேசினர். கல்விக் கடன், பொறியியல் கவுன்சிலிங் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு உதவும் வகையில், பாடங்களில் எளிதாக மதிப்பெண் வாங்க உதவும் "விழி முன் வழி' என்ற புத்தகம் தரப்பட்டது.

 

0 comments: