ஆசிரியர் பணியை ரசித்து ஆனந்தமாய் செய்யுங்கள் : ஈஷா சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரை

http://img.dinamalar.com/data/thumb/thumb_112881.jpg

சிதம்பரம் : குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கக் கூடிய சக்தி உங்களிடம் இருப்பதால், அந்த பணியை ரசித்து ஆனந்தமாய் செய்யுங்கள் என, ஆசிரியர்களுக்கு, சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரை வழங்கினார். சிதம்பரத்தில் சத் சங்கங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், சுனாமியால் பாதித்த கடற்கரை கிராமமான மடவாப்பள்ளத்தில் இயங்கி வரும் ஈஷா வித்யா பள்ளிக்கு சென்றார். அங்கு ஆசிரியர், ஆசிரியைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ஆசிரியர்கள் மத்தியில் சத்குரு பேசியதாவது: ஆயிரம் குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கக் கூடிய சக்தி ஆசிரியர்களிடம் உள்ளது. தாய், தந்தைக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை உருவாக்க துணையாக இருக்கும் ஆசிரியர் பணியை நீங்கள் ரசித்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் எல்லையில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும். நான் என்று வாழ்பவர் 10 பேர் முன் சிரித்தாலும், அவர்களிடம் சந்தோஷம் இருக்காது. நமக்காக இல்லாமல் சூழ்நிலைக்காக எதையும் செய்ய வேண்டும்.

எனக்கு மரம் வைக்க வேண்டும், பள்ளிகள் திறக்க வேண்டும் என்று ஆர்வம் இல்லை. இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் நல்ல பள்ளிகள் தேவை. நாட்டிற்கு பசுமை மரங்கள் தேவை என்பதால் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. நமக்கு பிடித்ததை செய்வதை விட, சூழ்நிலைகேற்ப எதையும் ஆனந்தமாக செய்ய வேண்டும். உடல் நிலை சரியில்லாமல் சென்றால் டாக்டருக்கு ஆபரேஷன் செய்யப் பிடிக்கும், அதைவிட பீஸ் வாங்குவது பிடிக்கும் என்பதற்காக சாதாரணமாக உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு ஆபரேஷன் செய்வது நியாயமாகுமா?

நோக்கமில்லாமலும், உற்சாகமில்லாலும் மனிதன் வாழ்ந்தால் பல பிரச்னைகள் உருவாகும். மூன்று நாட்கள் அப்படி இருந்தாலே வாழ்க்கையில் வெறுப்பு வந்து விடும். அதனால், ஜனத்தொகை நாட்டில் பெரிய பிரச்னையாகி விடும். எனவே அனைவருமே அதிசயமாக, ஆனந்தமாக எதையாவது செய்தால் எந்த பிரச்னையும் இருக்காது. சோர்வாகவும், உற்சாகமில்லாத மனிதன் அவன் கெட்டுப் போவதுடன், அடுத்த தலைமுறையை கெடுக்கிறான். இங்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு ஆசிரியைகளாகிய நீங்கள் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் ஆனந்தமாக, அன்பாக, பூ மாதிரி பழகுங்கள். இவ்வாறு சத்குரு பேசினார்.

பள்ளி திறந்தவெளி மைதானத்தில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களுடன் உரையாடி, பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை ரசித்தார்.

 

0 comments: