67 கோடி மொபைல் போன் வளர்ச்சி குறித்து "டிராய்'

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSk02YP1GK8Vk9BMcSzSbadAffZ1_eANRR-zhfKM8rRlGkQr1s&t=1&usg=__Hjums5MqdOLxjboOCA22R8qtuzY=

புதுடில்லி : கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு கோடியே 81 லட்சத்து 80 ஆயிரம் மொபைல்போன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த மொபைல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 67 கோடியே ஆறு லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.


இது குறித்து "டிராய்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ஜூலை மாதம் மொபைல்போன் பயன்படுத்துவோர் 65 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரம் பேராக இருந்தனர். ஆகஸ்டு மாதத்தையும் சேர்த்தால், அவர்களின் எண்ணிக்கை 67 கோடியே ஆறு லட்சம் பேராக அதிகரித்துள்ளது. அதாவது 2.79 சதவீதம் அதிகரித்துள்ளது. மொபைல்போன் மற்றும் வீட்டு இணைப்பு போன் வைத்திருப்போரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஆகஸ்டு மாதம் வரை, 70 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஆகும். இந்தியாவின் தொலை அடர்த்தி (100 பேருக்கான தொலைபேசிகள்) விகிதம் 59.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.


கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் வோடபோன் நிறுவனம் 20 லட்சத்து 30 ஆயிரம் பேரையும், பி.எஸ்.என்.எல்., 20 லட்சத்து 25 ஆயிரம் பேரையும், ஏர்டெல் நிறுவனம் 20 லட்சத்து மூவாயிரம் பேரையும், "ஐடியா' நிறுவனம் 10 லட்சத்து 98 ஆயிரம் பேரையும், ஏர்செல் நிறுவனம் 10 லட்சத்து 61 ஆயிரம் பேரையும் வாடிக்கையாளர்களாக சேர்த்துள்ளன. "ரிலையன்ஸ்' நிறுவனம் 20 லட்சம் பேரையும், "டாடா' நிறுவனம் 20 லட்சத்து ஒன்பதாயிரம் பேரையும் சேர்த்துள்ளன. கடந்த ஜூலை மாதம், வீட்டு இணைப்பு போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை மூன்று கோடியே 59 லட்சமாக இருந்தது. ஆகஸ்டு மாதம் இந்த எண்ணிக்கை மூன்று கோடியே 57 லட்சமாக குறைந்து விட்டது. இந்தியாவில் அகண்ட அலைவரிசை இணைப்பு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 லட்சத்து 77ஆயிரம் பேரில் இருந்து ஒரு கோடியே எட்டாயிரம் பேராக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

1 comments:

nis said...

நல்ல தகவல்