மனித சக்தியை நாட்டு வளர்ச்சிக்கு பயன் படுத்த வேண்டும்: கலெக்டர்

தர்மபுரி: ""மனித சக்தியை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், '' என பஞ்சாயத்து தலைவர்கள் புத்தாக்க பயிற்சி முகாமில் கலெக்டர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் ஆனந்தகுமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: மாவட்ட கலெக்டருக்கு எந்தளவுக்கு அதிகாரம் உள்ளதோ, அதற்கு மேல் கடமைகள் உள்ளன. அதேபோல் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் நிறைய கடமைகள் உள்ளன. பஞ்சாயத்து தலைவரும் ஒரு அரசு ஊழியர்தான். அதை மனதில் வைத்து கொண்டு பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பஞ்சாயத்து தலைவர்கள் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும். பஞ்சாயத்து தலைவர்கள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினால் மக்கள் வளர்ச்சி தட்ட பணிகள் இலக்கை, குறிக்கோளை அடைந்து விடலாம்.

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாநிலத்தில் நான்காவது இடத்தில் தர்மபுரி மாவட்டம் உள்ளது. வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் செங்கல்களை குறைந்த விலைக்கு பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தர்மபுரி மாவட்டம் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் முதல்இடத்தை பிடிக்கும். அரசின் திட்டங்கள் மாவட்டத்தில் ஏராளமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையிலும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும்.தமிழகத்தில் பறக்கும் ரயில் திட்டத்திற்கு அடுத்த பெரிய திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் 2,000 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படுகிறது. பஞ்சாயத்து தலைவர்களும், அரசு ஊழியர்களும் சிரமங்களை பகிர்ந்து கொண்டு சந்தோஷத்தை பெருக்கி கொள்ள வேண்டும். மனித சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

0 comments: